Sunday, October 31, 2004

தீபாவளிக்கு இன்னும் பத்தே நாட்கள் தான் இருக்கின்றன.அமெரிக்காவில் இருப்பதாலோ என்னவோ 'தீபாவளி காய்ச்சல்' இன்னும் தொற்றிக்கொள்ளவில்லை. இப்பொழுதெல்லாம் பண்டிகைகள் எதுவும் அவ்வளவு உற்சாகத்தை தருவதில்லை. வேலையில் இருந்து 2 அல்லது 3 நாட்கள் ஓய்வு, அம்மாவின் கையால் சாப்பாடு, டீவியில் இரண்டு படங்கள், நல்ல தூக்கம் என்பதுதான் பண்டிகைகளின் definition ஆகி விட்டது.

சிறு வயதில் எல்லாம் தீபாவளியை நினைத்தாலே உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அதை இப்பொழுது நினைத்தாலும் 10, 15 வயது குறைந்து உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.

தீபாவளிக்கு 1 மாதத்திற்கு முன்பே preparation தொடங்கி விடும். இந்த தடவை என்ன dress எடுக்கலாம் என்பதிலிருந்து எல்லாமே தீர்மானிக்க பட்டு விடும்.முறையாக meeting போடுவதில்லை என்றாலும் , on the run- discussions நடக்கும்.

முதலில் புது துணி : அம்மாவிடம், "இந்த தடவை பச்சை கலர் வேண்டாம்மா.. எப்பவும் பச்சை கலரே எடுக்கறீங்க.." - என்னுடைய complaint. தீபாவளி dress-ஐத்தான் பொதுவாக தீபாவளிக்கு அடுத்து வரும் எங்கள் பள்ளி ஆண்டு விழாவிற்கு போட்டுக்கொள்வோம். எங்கள் பச்சை color uniform-ஐ 6 நாட்களும் பார்த்த கண்களுக்கு பச்சை என்றாலே அலர்ஜியாகி விட்டது.ஆனால் என்னுடய அதிர்ஷ்டம், அந்த தீபாவளிக்கு எல்லா துணிக்கடைகளும் பச்சை நிறத்தை மட்டுமே குத்தகைக்கு எடுத்திருப்பார்கள்.பச்சையோடு பச்சையாக பீரோவின் என்னுடய அறையில், புது துணி சங்கமம் ஆகி விடும். "சரி , பிறந்த நாளுக்கு கண்டிப்பா பச்சை கிடையாது!" என்று அம்மாவிடம் condition போட்டு விட்டு, அடுத்து புது துணி எடுக்கும் வரை, அதை மறந்து விடுவேன்.அண்ணன் எப்பவுமே சமர்த்து.இப்படி complaint, condition எல்லாம் கிடையாது :). புது துணி எடுக்கும் கதையை பற்றி எழுதினாலே சில பக்கங்கள் தேவைப்படும்.அதனால் அதை பற்றி இன்னொரு நாள் எழுதுகிறேன்.இப்பொழுது திரும்ப நம் தீபாவளிக்கு போவோம்..

அம்மாவின் பலகார வேலைகள் தோராயமாக 10 நாட்களுக்கு முன்பே தொடங்கும். அதிரசமும் எள்ளுருண்டையும், எங்கள் வீட்டில் தீபாவளியின் ஒரு அங்கம். அப்பொழுது எல்லாம் மிக்ஸியும் கிரைண்டரும் அவ்வளவாக புழக்கத்தில் இல்லை. அதனால் பலகாரத்திற்கு மாவு இடிப்பதற்கு ஆள் தான் தேட வேண்டும். அது முடிந்தாலே அம்மாவின் பாதி தீபாவளி (மகிழ்ச்சியாக) முடிந்து விடும்.[அப்பவே outsourcing எல்லாம் பண்ணி இருக்காங்க]. ஆள் கிடைக்கவில்லை என்றால், அம்மாவும் பாட்டியும்தான் 3 அல்லது 4 படி அரிசியை இடித்தாக வேண்டும். அவர்கள் இருவரும் கஷ்டப்பட்டு இடித்த மாவில், கை விரலால் கோலம் போடுவது என்றால், எனக்கு கொள்ளை இஷ்டம்[பாட்டியிடம் திட்டு வாங்கி கொண்டேதான்!!]

மாவு இடித்தாகி விட்டது; புது துணி எடுத்தாகி விட்டது; இன்னொரு முக்கியமான item பத்தி இன்னும் எழுதலயே! ஆங்.. பட்டாசு!! அதற்கு பெரிதாக list எல்லாம் போட மாட்டோம். Budget-இற்கு ஏற்றவாறு, அப்பா மதுரையில் இருந்து பட்டாசு வாங்கி கொண்டு வந்து விடுவார்.அதனால் அப்பா மதுரைக்கு போய் விட்டு வந்த மறுநாள் காலை, நான் எழுந்தவுடன் [மற்ற நாட்கள் போல் முழிப்பு வந்த பின்னும் , குப்புறப்படுத்து அல்லா ஓதாமல் (நான் படுத்திருக்கும் position-ஐ அம்மா அப்படித்தான் வர்ணிப்பார்), அன்றைக்கு உடனே எழுந்து விடுவேன்], நேராக Store room-இல் போய், என்ன என்ன புதிதாக வந்திருக்கறது என்று ஒரு survey நடத்துவேன்.அங்கு எதுவும் கண்ணில் படவில்லை என்றால், நேராக அம்மாவிடம் போய் நிற்பேன். பிள்ளையின் மனம் அறியாத அம்மா யார்?? அவரும் தேடி பார்த்து , பீரோ மேல் இருக்கும் பட்டாசுகளை எடுத்து கையில் கொடுத்து என் முகம் மலர்வதை பார்த்துவிட்டு , சமையல் அறையில் நுழைந்து விடுவார்.

இன்னும் ஒரே நாள் தான் இருக்கிறது!
(outsourcing செய்து) இடித்த கலந்து வைத்த மாவில் , அதிரசமும் எள்ளுருண்டையும் செய்தாக வேண்டும். ஆளுக்கு உள்ளங்கையில் கொஞ்சம் எண்ணைய் தடவிக்கொண்டு, எள்ளுருண்டை செய்ய தொடங்கி விடுவோம். கடைக்குட்டி என்பதால், வீட்டில் நிறைய சலுகைகள் உண்டு. [சலுகை எண் 1 : "கை எல்லாம் மாவு ஒட்டும்" என்று, spectator ஆக இருப்பதிற்கு அனுமதி கிடைத்து விடும்.]

நாங்கள் செய்யும் உருண்டைகளை அம்மா batch batch-ஆக எண்ணையில் போட்டு எடுப்பார்.அண்ணன் கல்லூரிக்கு சென்ற வருடத்தில் தொடங்கி அம்மா ஒவ்வொரு தீபாவளிக்கும் "என் பையன் இருந்தா இந்நேரம் பாதி வேலை முடிஞ்சிருக்கும்", என்று சொல்வதில் ஆச்சரியம் இல்லை. நாங்கள் ருசி பார்க்கும் சாக்கிலேயே 10% உருண்டைகள் காலி செய்து விடுவோம் என்பது வேறு விஷயம் :) நோன்பிற்கு வேண்டியவை எல்லாம், அம்மா போட்ட list-ஓடு அப்பா வாங்கி வந்து விடுவார்.

பொதுவானவை எல்லாம் முடிந்து விட்டது. அடுத்து, என்னுடைய department - கோலம் போடுவது. அப்பா, அண்ணன், சாரதி மூவரிடமும் வேலை வாங்கிய பின், எனக்கு வேண்டிய கலர் கோலப்பொடி பாக்கெட்டுகள் எல்லாம் வீட்டில் ஆஜர் ஆகி விடும். எல்லாவற்றையும் ஒரு முறை சரி பார்த்து விட்டு என்னுடய கோல நோட்டையும், பக்கத்து வீட்டு 'பேபி' அக்காவிடம் (பெயர் பற்றிய கேள்விகளை சமாளிக்க முடியாமலே, அவருடைய பெயரை திருமணத்திற்கு முன்பு 'பவித்ரா' என மாற்றி கொண்டார்!!)இரவல் வாங்கிய கோல நோட்டுக்களுடன் உட்கார்ந்த பின், அம்மாவின் பலகார வேலையை interrupt செய்து, கையோடு அழைத்து வந்து கோலம் select செய்வதில் உட்கார்த்தி விடுவேன். கையில் இருக்கும் கலர்கள், பக்கத்து வீட்டில் போடும் கோலங்கள் எல்லாவற்றையும் மனதில் கொண்டு, இரு கோலங்கள் தேர்ந்தெடுக்கப்படும். ஒன்று பெரியது - தலை வாசலுக்கு , இன்னொன்று supplement: special-ஆக என்னுடய கோலங்களுக்காகவே அப்பா cement பூசிய(இதுவும் கடைக்குட்டி special), கிழக்கே பார்த்து இருக்கும் வாசலுக்காக.என்னென்ன கலர் எங்கெங்கே போடுவது என்று முடிவான பின், நானும் அம்மாவும் இரவே கோலம் போட தொடங்கி விடுவோம்.. மற்றவர்கள் எழும் முன் எங்கள் வீட்டின் வாசலில் 'Happy Diwali' அல்லது 'தீபாவளி வாழ்த்துக்கள்' உடன் கலர் கோலம் மின்னும்.

1 மாதமாக எதிர்பார்த்த நாள் வந்து விட்டது!
பக்கத்து வீட்டு பிரபு எல்லா வருடமும் போல், அதிகாலை 4 மணிக்கே வெடி வெடிக்க தொடங்கி விடுவான்.தூக்கம் கெடுக்கும் அவனை மனதிற்குள் திட்டிக்கொண்டே, போர்வையை இழுத்து மூடி மீண்டும் தூங்கிப் போவேன்.. அம்மாவில் தொடங்கி , ஒவ்வொருவராக 'எண்ணைக் குளியல்' முடிக்க, கடைக்குட்டி சலுகை எண் இரண்டின் படி, எல்லோரும் ready ஆகும் வரை நான் தூங்கலாம். :)

குளித்தவுடன் புது dress-ஐ அணிந்து கொண்டு , 'Super-ஆ இருக்கு கண்ணா!!' என்று அம்மாவும் அப்பாவும் சொல்வதைக் கேட்ட பெருமிதத்துடன், சாமி கும்பிட்டு விட்டு அப்பா அம்மாவின் ஆசிர்வாதத்தோடு தீபாவளி காசு 100 ரூபாயை(!!) வாங்கி,அப்பா முன்பு பரிசாக கொடுத்த சிங்கப்பூர் பர்ஸில் பத்திரப்படுத்தி விட்டு, பட்டாசு வெடிக்க படையோடு கிளம்பி விடுவோம்.

சரஸ்வதி வெடிக்கே அப்படி பயந்து , 20 அடி தூரத்தில் இருந்து அண்ணன் வெடிப்பதை காது பொத்தி வேடிக்கை பார்த்து கொண்டிருப்பேன்.[வயசு ஆக ஆக பயம் விட்டு போச்சு.. கையிலயே சரஸ்வதி வெடி-ய பத்த வச்சு தூக்கி போடற அளவுக்கு expert ஆனது வேற கதை.] [இருங்க இருங்க...காலையில சீக்கிரம் எந்திரச்சது வேற.. ரொம்ப பசிக்குது! 'இப்போ ஒரு Break-Sun TV Countdown-ல பார்த்தசாரதி சொல்ற மாதிரி tone-ல கற்பனை பண்ணிக்கங்க.] அம்மாவின் , தீபாவளி special breakfast ready ஆனவுடன் , சுடச்சுட பொங்கல், சாம்பார் இட்லி எல்லாவற்றையும் ஒரு கை பார்த்து விட்டு , அடுத்து shift வெடி வெடிக்க கிளம்பி விடுவோம். இருக்கும் பட்டாசுகளை எல்லாம் காலி செய்த பின் பாகிஸ்தானை கிரிக்கெட்டில் வென்ற திருப்தியோடு திரும்ப வீட்டிற்குள் நுழைவோம்.அப்புறம்,வானொலியில் ஒலிபரபரப்பாகும் Special நிகழ்ச்சிகளை எல்லாம் கேட்டு விட்டு மதிய உணவிற்கு பின் சிறு தூக்கம் அரங்கேறும்.[எவ்வளவு வேலை செஞ்சிருக்கேன்.. rest எடுக்க வேண்டாம்?? ;-)) ]

தீபாவளி அன்றே நோன்பு வந்தால், அம்மாவிற்கும் அப்பாவிற்கும் double டென்ஷன். எனக்கும் பொறுப்பு அதிகமாகி விடும்!! பெரிய மனுஷி போல், பக்கத்து வீடுகளுக்கெல்லாம் சென்று, இரவு dinner-க்கு அழைத்து விட்டு வருவேன்.[அந்த சாக்கில் எல்லோரிடமும் என்னுடய தீபாவளி dress-யும் காட்டி விடலாம் :) ]. அம்மாவின் நோன்பு முடிந்தவுடன், மீன்டும் பொறுப்பு அதிகமாகி விடும். வரும் விருந்தினற்கு எல்லாம் , இலை போட்டு பரிமாறி விட்டு[நான் நன்றாக serve செய்வேன் அன்று அம்மா எப்பொழுதும் மற்றவர்களிடம் பெருமையாக சொல்வார்!!(அது மட்டும் தான்..)] எல்லோரும் சென்ற பின், அம்மா, அப்பா, அண்ணன், நான் எல்லோரும் சேர்ந்து dinner முடிக்கும் பொழுது , இந்த தீபாவளியை வெற்றிகரமாக அரங்கேற்றிய பெருமிதத்தையும் அலுப்பையும் அம்மாவின் முகத்தில் பார்க்கலாம்.

அச்சச்சொ!! அத மறந்துட்டேனே!! இருங்க இருங்க.. என்னோட ஸ்கூல் பேக் எங்க போச்சு? இன்னும் ஒரு நாள் லீவ் தான் இருக்கு.. அதுக்குள்ள அத்தனை subject homework-ஐயும் நான் போய் முடிக்கனுமே.

அடுத்த தீபாவளிக்கு கண்டிப்பா நீங்களும் எங்க வீட்டுக்கு வரணும் .. சரியா??

5 Comments:

Blogger genteel said...

happy diwali

October 31, 2004 8:07 PM  
Blogger Priya said...

genteel,
happy diwali to you too!!

October 31, 2004 10:12 PM  
Blogger Srinivasulu said...

Very nice writeup, especially I liked the childishness in it, It made me dwell in my yesteryears for more than 10 mins I took to read (Thanks to my Tamizh reading skills :)), Makes me wonder how I myself have changed for each diwali that I have crossed :)..

November 02, 2004 11:56 AM  
Blogger Priya said...

Thanks, ulu. I guess it always is wonderful to dwell in the memories of our childhood. :)

November 02, 2004 8:31 PM  
Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

November 04, 2004 4:34 AM  

<< Home